நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திர அறையில் 20 நிமிடங்கள் இயங்காத கேமரா: யூபிஎஸ்சில் பியூஸ் போனதால் மின்தடை என கலெக்டர் தகவல்

விழுப்புரம்: நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் மக்களவை தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமரா 20 நிமிடம் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு துணை ராணுவம், ஆயுதப்படை உள்ளிட்ட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறையை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிசிடிவி கேமராக்கள் பழுதை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களில் பின் கேமராக்கள் மீண்டும் இயங்க தொடங்கியது. கேமாரக்கள் பழுது குறித்து இந்த தொகுதியின் விசிக வேட்பாளர் ரவிக்குமார் எம்பி, தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பழனியிடம் புகார் அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைகளில் நேற்று காலை 9.28 மணி அளவில் திடீரென்று கண்காணிப்புக் கேமராக்கள் நின்று விட்டன. அவை சரி செய்யப்பட்டு 9.58 மணி அளவில் மீண்டும் இயங்க தொடங்கின. தேர்தல் நடத்தும் அதிகாரி விரைந்து வந்து மின்னிணைப்பு சம்பந்தமான அதிகாரியையும் நேரில் வரவழைத்து, கவனத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்’ என்றார். விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நேற்று காலை 9.30 மணியளவில் யூபிஎஸ்சில் ஏற்பட்ட பழுது காரணமாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின்சாதனங்களில் தடை ஏற்பட்டது. இந்த பழுதை அதிகாரிகள் மற்றும் விசிக, அதிமுக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நீலகிரி, ஈரோடு மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பழுதானது குறிப்பிடத்தக்கது.

The post நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திர அறையில் 20 நிமிடங்கள் இயங்காத கேமரா: யூபிஎஸ்சில் பியூஸ் போனதால் மின்தடை என கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: