உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத விவகாரம் அதிமுக ஆட்சியில் தேர்வான 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.

இதில் 4 பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற 14 பணியிடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எழுத்து தேர்வு நேர்முக தேர்வு நடந்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், முறையான இன சுழற்சி முறை பின்பற்றி இட ஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட தேர்வாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆசிரியர் தேர்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, உரிய இன சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2020ம் ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பணி நியமனங்கள் இறுதி தீர்ப்பு கட்டுப்பட்டது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர்.மஞ்சுளா முன் நடந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, நியமனத்தில் முறையான இன சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தேர்வாளர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கப்படவில்லை.

எனவே, பட்டியலை ரத்து செய்ய வேண்டும், தகுதியின் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு முறையிலும் புதிய பட்டியலை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, 2020ல் வெளியிடப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. 4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.

The post உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத விவகாரம் அதிமுக ஆட்சியில் தேர்வான 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: