மஞ்சூர் சுற்றுப்புறத்தில் தொடர் மழையால் அப்பர்பவானி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-மின் துண்டிப்பால் மக்கள் அவதி

மஞ்சூர் :  மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் இடைவிடாமல் பெய்த பலத்த மழையில் அப்பர்பவானி சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவும் விடிய, விடிய சூறாவளி காற்றுடன் பெய்த மழை நேற்று பகல் முழுவதும் நீடித்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சந்தை தினமான நேற்று மஞ்சூரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள அப்பர்பவானி பகுதியிலும் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி இப்பகுதியில் 4.8 செ.மீ, அதையொட்டியுள்ள அவலாஞ்சி பகுதியில் 10.3 செ.மீ மழையும் பதிவானது. இந்நிலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் சாலையோரத்தில் இருந்த ராட்சத கற்பூர மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர் அப்பர்பவானி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறை குந்தா பிரிவு உதவி பொறியாளர் பெருமாள் தலைமையில் சாலை ஆய்வாளர் நஞ்சுண்டன் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து சென்று ரோட்டில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

நீண்ட போராட்டத்திற்கு பின் மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதேபோல் அப்பர்பவானி மற்றும் கோரகுந்தா சாலையில் சுமார் 10கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட மண் சரிவுகளையும் நெடுஞ்சாலைதுறையினர் அகற்றி சீரமைத்தனர். கிண்ணக்கொரை பகுதியில் நேற்று முன் தினம் இரவு மழையுடன் வீசிய சூறாவளி காற்றில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் கிண்ணக்கொரை, இரியசீகை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதையடுத்து குந்தா மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை கிண்ணக்கொரை பகுதிக்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து பல மணி நேர துண்டிப்புக்குபின் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் மின் விநியோகம் சீரானது. இதேபோல் பிக்கட்டி அவரைகண்டி பகுதியை சேர்ந்த கொடியரசு என்பவரது வீட்டின் சமையலறை மழையில் இடிந்து விழுந்தது. இத்தகவல் கிடைத்தவுடன் குந்தா தாசில்தார் இந்திரா அறிவுறுத்தலின் பேரில் வருவாய்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மஞ்சூர் சுற்றுபபுற பகுதிகளில் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories: