ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் 15 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கிணறு, ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வந்தது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் மின் இணைப்பு மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில கிராமங்களில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட கிணறுகள் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பிரச்னைக்காக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனால் அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீருக்காக மாற்று வழி ஏற்பாடு செய்து வந்தனர். இதனால் நிரந்தரமாக பல்வேறு பகுதிகளில் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் புத்தூர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள மக்கள் குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் கடந்து குடிநீர் பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ கிரி வேலன் இங்குள்ள பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது கிணறு அமைக்கப்பட்டு முட்புதர்கள் சூழ்ந்து பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.இதனை நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிணற்றை சுற்றி சூழ்ந்து கிடந்த முட்புதர்களை அகற்றி பழுதடைந்த மோட்டார் மற்றும் நீர் பைப்புகளை வெளியேற்றி சீரமைத்தனர். மேலும் மின் மோட்டார் உடன் பைப்புகள் அமைத்து இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதியை ஏற்படுத்தினர். மேலும் இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட கிணற்றில் புத்தூர் மற்றும் கீழ் காடு வட்டம் பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது 15 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறும் பயன்பாட்டிற்கு வந்ததால் இரண்டு கிணறுகளை ஒரு கிராமத்திற்கு ஒரு கிணறு என பிரித்து போதுமான தண்ணீர் வசதியை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வந்த அப்பகுதி மக்கள் தற்போது கிணறு சீரமைக்கப்பட்டு போதுமான குடிநீர் கிடைத்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.