21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்?: பைனலில் இன்று கிர்ஜியோசுடன் பலப்பரீட்சை

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பைனலில் ஏடிபி தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்(35), ஆஸ்திரேலியாவின் 27 வயதான கிர்ஜியோஸ் மோதுகின்றனர். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சிற்கு இது 8வது விம்பிள்டன் பைனலாகும். இதற்கு முன் ஆடிய 7 பைனலில் ஒன்றில் மட்டுமே (2013ல்) தோற்றுள்ளார். 6 முறை வெற்றிபெற்றுள்ளார்.

ஓட்டுமொத்தமாக அவர் 32வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலில் களம் காண்கிறார். ஸ்பெயினின் ரபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஜோகோவிச், ரோஜர்பெடரர் தலா 20 முறை பட்டம் வென்றுள்ளனர். இன்று ஜோகோவிச் வெல்லும் பட்டத்தில் 2வது இடத்திற்கு முன்னேறுவார். மறுபுறம் கிர்ஜியோஸ் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் களம் காண்கிறார். அரையிறுதியில் அவருடன் மோத இருந்த நடால் காயத்தால் விலகியதால் பைனல் வாய்ப்பை கிர்ஜியோஸ் பெற்றார். இன்று மகுடம் சூடும் வீரருக்கு ரூ.19 கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும்.

இருவரும் இதற்கு முன் 2017ம் ஆண்டு (அகாபுல்கோ மற்றும் இண்டியன்வெல்ஸ் தொடர்) 2 முறை மோதி உள்ளனர். இதில் 2 போட்டியிலும் கிர்ஜியோஸ் தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பைனலில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில், துனிசியாவின் ஓன்ஸ் ஜபீரை வீழ்த்தி பட்ட்ம வென்றார்.

Related Stories: