புழுதி புகை மண்டலமான நல்லம்பாக்கம் கூட்ரோடு; விபத்து அதிகரிக்கும் அபாயம்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் கொளப்பாக்கம் அருகேயுள்ள நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து புகைமண்டலம் போல் காட்சியளித்து வருகிறது.  புகை மண்டலத்தால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,“தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர், கொளப்பாக்கம், நல்லம்பாக்கம் கூட்ரோடு வழியாக கீரப்பாக்கம் வரை 55டி என்ற 2 மாநகர பஸ்கள்  பல ஆண்டுகளாக இயங்கப்பட்டு வந்தது. சாலை பழுதுகாரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 2 மாநகர பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், வேலைக்கு செல்வோர் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 இதுமட்டுமின்றி 3 கிமீ தூரம் வரை  நடந்து சென்று வேறு பஸ் பிடித்து செல்லவேண்டிய நிலையுள்ளது. நல்லம்பாக்கம் மற்றும் ஊனமாஞ்சேரி பகுதியில் உள்ள கிரஷர்களுக்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்வதால் சாலை  குண்டும், குழியுமாக நடக்கக்கூட முடியாத அளவுக்கு படுமோசமாக உள்ளது. நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

புழுதி நிறைந்த சாலையாக மாறி புகைமண்டலம் போல்காட்சியளிக்கிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் புழுதி பறப்பதை தடுத்து போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Related Stories: