முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் நிழற்குடை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் வளைவு பகுதியில் உள்ள திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையானது அப்பகுதி குடியிருப்பு பகுதிக்குள் சென்று வந்தது. பின்னர் இந்த சாலை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையாக மாற்றி அமைக்கும்போது சாலையை நேர் படுத்துவதற்காக குடியிருப்பு பகுதிக்கு செல்லாமல் நேர்படுத்தபட்ட சாலையாக அப்பகுதி கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அதே பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பேருந்து நிறுத்த கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு பேருந்து நின்று செல்லும் வகையிலும், தவிர்க்க முடியாத நேரத்தில் பேருந்துகள் திரும்பும் வகையிலும் போதிய அகலமாக இடமும் விடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தற்போது இந்த பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பேருந்து நிறுத்தம் கட்டிடத்தில் மரத்தால் செய்யப்பட்ட நெல் வைக்கும் பத்தாயம் மற்றும் கீற்று கட்டுகள் அங்கு வைத்து அந்த கட்டிடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாதளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் கட்டிடத்தில் அருகே மற்றும் சுற்றுப்பகுதி இடத்தையும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் ஆக்கிரமிப்பு செய்து வேலி அடைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேருந்து ஏற வரும்போது வெயில் காலங்களில் வெயிலில் நிற்பதும் மழைக்காலத்தில் மழைநீரில் நனைந்து நிற்பதுமாக சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நெடுஞ்சாலைதுறை அலுவலர்களும் நேரில் பார்வையிட்டு இந்த பேருந்து கட்டிடத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: