திருவள்ளூர் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சுவர் ஓவிய போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் சார்பில், ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களின் பங்களிப்போடு நகரை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவள்ளூர் நகராட்சி சார்பில் பாட்டு போட்டி மற்றும் சுவர் ஓவிய போட்டி நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.

அதன்பேரில், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயின் நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 86 பேர், நகராட்சி சுவரில் ஓவியம் வரைந்தனர். நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமை வகித்தார். அப்போது மாணவ, மாணவிகள், என் குப்பை என் பொறுப்பு, கழிவுகளை பிரித்தல், நகரத்தின் தூய்மைக்கு பொது மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியை தவிர்ப்பதன் அவசியம், நீர் நிலைகளை பாதுகாப்போம் ஆகிய தலைப்புகளில் ஓவியங்களை வரைந்திருந்தனர்.

இதனை நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ, தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி, தூய்மை பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். வருகிற 9ம் தேதி வரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஓவியப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். சுவர் ஓவிய போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற 13ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

Related Stories: