சித்தூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பைக் பேரணி

சித்தூர் : சித்தூரில் ரயில்வே போலீசார் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு  பைக் பேரணி நடத்தினர்.சித்தூர் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே போலீஸ்சார், பொதுமக்களிடையே சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அனைவரும் இரண்டு மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பைக் பேரணி நடத்தினர்.அப்போது, ரயில்வே இன்ஸ்பெக்டர் கோடீஸ்வர ராவ் பேசியதாவது:

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் படி ஆசாத் அம்ருத் மகா உற்சவம் திட்டத்தின் கீழ் சித்தூரில் இருந்து டெல்லி வரை பைக் பேரணி நடத்த உள்ளோம். மேலும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். இனி பயணிகள் சுத்தமான மினரல் வாட்டர் குடித்து பயன் அடைவார்கள். அதேபோல் ரயில் நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு உள்ளோம்.

மேலும் அனைத்து ரயில் நிலையங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சித்தூர் ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் ரயில்வே போலீஸ்சார் தலைமையில் பொது மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மக்களும் அவரவர்களின் வீட்டின் முன்பு இரண்டு மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். ரயில் நிலையங்களில் ஆங்காங்கே குப்பைகளை போடக்கூடாது. குப்பை தொட்டியிலே குப்பைகளை போட வேண்டும்.

பிளாஸ்டிக் கவர்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. ரயிலில் செல்லும் பயணிகள் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் அமரும் இருக்கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை போடக்கூடாது. தின்பண்டங்களை வீசக்கூடாது என பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம். தற்போது சித்தூரில் இருந்து பீலேர் வரை பைக் பேரணியில் ஈடுபட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: