திருபுவனை, மதகடிப்பட்டு, கண்டமங்கலம், அரியூரில் மேம்பால பணிகள் தீவிரம்: 4 வழிச்சாலை பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

திருபுவனை:  விழுப்புரம்-நாகை இடையே  4 வழிச்சாலை அமைக்க திருபுவனை, மதகடிப்பட்டு, கண்டமங்கலம், அரியூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் எல்லா பகுதிகளிலும் சாலை பணிகள் நடப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலை போக்க முக்கிய சாலைகள் நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது வாகன பெருக்கம் அதிகரித்து வருவதால், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு முக்கிய சாலைகளை நான்கு வழிச் சாலையாக மத்திய அரசு விரிவாக்கம் செய்து வருகிறது.

அதன்படி விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 194 கிலோ மீட்டர் தூரம் கொண்ட, இந்த சாலை ரூ.6430  கோடி செலவில் விரிவுபடுத்தப்படுகிறது.  சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு நான்கு தனியார் நிறுவனங்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  சாலை பணி முழுமையடைந்த பின்னர் 15 ஆண்டுகள் இதனை பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  

முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் பகுதிகளில்  நிலம் கையகப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் சாலை அமைக்க 45 மீட்டர் அகலத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் புறவழிச்சாலை தவிர தற்போது உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு  புதிதாக அமைக்கப்படும் புறவழிச் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படவுள்ளன. இதற்காக  சாலைகளின் நடுவில்  சென்டர் மீடியன் அமைக்கப்பட இருக்கிறது.

 

இதில் முதல் கட்டமாக மேம்பாலம் அமைக்கும் பணி திருவாண்டார் கோவில் பகுதியில் செயல்படுத்தப்படுகிறது. இப்பணியில் இரவு பகலாக  வெளிமாநில தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  இதற்காக  மண் நிரப்பும் பணிகளில் ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. திருபுவனை, மதகடிப்பட்டு, கண்டமங்கலம், அரியூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் எல்லா பகுதிகளிலும் சாலை பணிகள் நடப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை பயன்படுத்துவோர் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.  சாலை விரிவாக்க பணிக்காக அப்பகுதியில் தெரு விளக்குகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.  இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

தற்காலிக ஏற்பாடாக முக்கிய பகுதிகளில் மின் விளக்குகள்  அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். சாலை பணிக்காக பள்ளம் தோண்டும்போது டெலிபோன் ஒயர்கள் கட் ஆகி அடிக்கடி அப்பகுதிகளில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்காமல் பல்வேறு நிறுவனங்களும் பொது சேவை மையங்களும்  இடர்பாடுகளை சந்தித்து வருகின்றன.  இதனையும் கருத்தில் கொண்டு வேலை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சாலைப்பணிக்காக அரியூர், கண்டமங்கலம், திருவாண்டார்கோவில்,  திருபுவனை, மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: