விவசாய பணிக்கு சென்றபோது ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 5 பெண்கள் உடல் கருகி பலி: ஆந்திராவில் சோகம்

திருமலை: ஆந்திராவில் விவசாய பணிகளுக்கு கருவிகளுடன் சென்ற போது, உயர் அழுத்த மின்கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்ததில் 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டம், குன்றம்பள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் மற்ற கிராமங்களுக்கு லோடு ஆட்டோக்களில் சென்று,  நாற்று நடவு உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை 6.30 மணியளவில் குன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பெண் தொழிலாளர்கள் ஆட்டோவில் விவசாய பணிகளுக்கு கருவிகளுடன் சென்றனர்.

மேலும், இரும்பு கட்டில் ஒன்றை ஆட்டோவின் மேல் பகுதியில் வைத்திருந்தனர். சில்லகொண்டையப்பள்ளி வழியாக ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள சாலையின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவின் மேல் இருந்த இரும்பு கட்டில் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. இதனால், ஆட்டோவில் இருந்து வெளியேற முடியாமல் 5 பெண் தொழிலாளர்கள் அலறி துடித்தனர். தீ மளமளவென பரவியதால், 5 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் புட்டபர்த்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புட்டபர்த்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: