பெரியகுளம் அருகே ஆர்ப்பரிக்கும் கும்பக்கரை அருவியில் போதை ஆசாமிகளை அனுமதிக்காதீர்கள்-சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

பெரியகுளம் : தொடர் மழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இங்கு போதை ஆசாமிகளை வனத்துறையினர் குளிக்க அனுமதிக்க கூடாது என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. தென்மாவட்ட மக்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலமாக இந்த அருவி உள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் தொடர்ந்து நீர்வரத்து இருக்கும் நிலையில் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் சில ஆண்கள் மதுபோதையில் அருவியில் குளித்த பெண்களிடம் தகாத முறையில் சில்மிஷங்கள் செய்துள்ளனர். இதை தட்டி கேட்ட வனத்துறை ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், ‘‘கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

 சுற்றுலாத்தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வனத்துறையினர் கும்பக்கரை அருவிக்கு செல்பவர்களை நுழைவாயிலிலேயே பரிசோதனை செய்ய வேண்டும். மது அருந்தி விட்டு வருபவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க கூடாது. மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு கும்பக்கரை அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்க அனுமதி இல்லை என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், என்றனர்.

Related Stories: