முதல் கணவரின் சொத்தில் பங்கு கேட்கலாமா?

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது  தோழி?

அன்புள்ள தோழிக்கு,

நான் இல்லத்தரசி. வயது 45. எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகன், எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என 3 பிள்ளைகள். ஆம். அவர் எனக்கு 2வது கணவர். ஆனால் அவருக்கு ஒருபோதும் அந்த பாகுபாடு இல்லை.நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தேன். அதேபோல் வசதியான குடும்பத்தில்தான் நான் முதலில் வாழ்க்கைப்பட்டேன். அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டனர். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருப்பர்கள். வாரம் தோறும் மறக்காமல் வார வழிபாட்டுக்கு செல்ல வேண்டும். காரணம் அவர்கள் தீவிரமான மதப்பற்று உள்ளவர்கள்.

பூ வைக்கக் கூட அனுமதிக்க மாட்டார்கள். நாங்களும் அதே மதம்தான். ஆனால் வேறுவேறு பிரிவை சேர்ந்தவர்கள். நாங்களும் தவறாமல் வார வழிபாட்டுக்கு செல்வோம். அப்படி தீவிரமாக இருக்க மாட்டோம். வார வழிபாட்டை நடத்தும் ஐயாதான், அந்த வீட்டில் எல்லாம். அவரை கேட்டுதான் எந்த முடிவையும் எடுப்பார்கள். அவரை விட என் மாமனார் வயதில் பெரியவர். அரசின் பெரிய பதவியில் இருந்தவர்.ஆனால் அந்த ஐயா வந்தால் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்.

இந்நிலையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டுதல், முதல் பிறந்தநாள் விழா எல்லாம் ஐயாவின் தலைமையில் பெரிய வழிபாட்டுக் கூட்டங்களாக நடந்தன.என் பையனுக்கு ஒன்றரை வயது இருக்கும் போது கணவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்து விட்டார். அப்போது எனக்கு வயது 24. கணவர் மரணத்துக்கு பிறகு கொஞ்ச நாட்கள் மாமியார் வீட்டில் இருந்தேன். அதன் பிறகு அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். ஏதாவது விசேஷங்களுக்கு மட்டும் மாமியார் வீட்டுக்கு போய் வருவேன்.

இடையில் என் தாய்மாமா, ‘ சின்ன வயசுல இப்படி ஆயிடுச்சி... இனி ரொம்பக் காலம் வாழணும்... தனியா இருக்கிறது கஷ்டம்.... அதனால இன்னொரு கல்யாணம் செய்து வைத்து விடலாம்’ என்று சொல்ல ஆரம்பித்தார். எனது பெற்றோருக்கும் அந்த எண்ணம் இருந்ததால், அவர்களும் மாமா கருத்துக்கு ஆதரவாக பேசினர்.

எனக்குதான் ஒருமாதிரியாக இருந்தது. என் கணவர் இறந்து அப்போதுதான் ஓராண்டாகி இருந்தது. அவரை மறந்து வேறு கல்யாணத்தை பற்றி யோசிக்க முடியவில்லை. அதே சமயம் என் மகனின் எதிர்காலம் எனக்கு முக்கியமாக தோன்றியது. 2வது திருமணத்தால் அவனது வாழ்க்கை பாதிக்குமோ என்று பயந்தேன். அதனால் மறுத்தேன்.

எனது மாமாவோ, ‘வரப்போகிறவர் குழந்தையை ஏற்றுக் கொண்டால், உன்னுடனேயே வளரட்டும்.... இல்லாவிட்டால் உன் அப்பா, அம்மா வளர்க்கட்டும்’ என்று சொன்னார். என் குடும்பத்தினர் எல்லாரும் அதையே சொல்ல, நானும் ஒரு கட்டத்தில் சரியென்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.இது குறித்து எனது மாமியார் வீட்டில் மாமா பேசினார்.

அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சண்டை போட்டார்கள். ஆனாலும் எங்கள் வீட்டில் உறுதியாக இருந்தார்கள். தொடர்ந்து வரன் தேட ஆரம்பித்தனர். அதில் ஒருவர் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். படித்தவர். தனியார் நிறுவனத்தில் சொற்ப வருமானம். முக்கியமாக அவர் வேறு மதத்தை சேர்ந்தவர். அந்த ஒரு விஷயத்திற்காக எனது பெற்றோரும் தயங்கினர். என் மாமாதான், ‘நல்ல பையன்’ என்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

அவருக்கும் என்னை பிடித்திருந்தது. சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்ததால், உறவினர்கள் ஆதரவில் வளர்ந்துள்ளார். என் பிள்ளையையும் இவரே வளர்ப்பதாகச் சொன்னார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விவரம் என் மாமியாருக்கு தெரிய, பிரச்னை ெசய்தார்கள். ‘பிள்ளையை தந்துட்டு கல்யாணம் செய்துக்கோ’ என்று சொன்னார்கள். காவல்நிலையம் வரை பஞ்சாயத்து சென்றது. முடிவில் என் மாமா நினைத்தபடிதான் ‘இனி உனக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று சொல்லிவிட்டு மாமியார் வீட்டினர் சென்று விட்டனர்.

இடையில் அப்பாவின் தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதனால் மீள முடியாத அளவுக்கு முடங்கிப் போனார்கள். ஆனாலும் எனக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அவர் ஒத்துக் கொள்வாரோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் மறுப்பேதும் சொல்லவில்லை. உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வேறு ஊருக்கு வந்து விட்டோம்.

அடுத்து ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். இப்போது எனக்கு 3 பிள்ளைகள். இவர் எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரிதான் நடத்துகிறார். மூவரும் என்னை விட அவரிடம் பிரியமாக இருக்கிறார்கள். பெரியவனும், இவர்தான் தனது அப்பா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான். வசதிகள் இல்லாவிட்டாலும், சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாத வாழ்க்கை. பெரியவன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டு இருக்கிறான். மற்ற பிள்ளைகளும் கல்லூரியில் படிக்கிறார்கள்.

என் 2வது திருமணத்திற்கு பிறகு முதல் மாமியார் வீட்டுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் திருமணம் செய்துகொண்டதை விட, அவர்களது பேரப்பிள்ளை வேறு மதத்தில் வளர்வதுதான் அவர்களுக்கு பெரும் பிரச்னையாக தெரிந்தது. ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து பேரப்பிள்ளை குறித்து ‘எப்படி இருக்கிறான்’ என்று மாமனார், மாமியார் மட்டும் தெரிந்தவர்களிடம் அவ்வப்போது விசாரிப்பதாக கேள்விப்பட்டேன்.

இந்நிலையில் எனது மாமனார், மாமியாருக்கு வயதானதால், சில நாட்களுக்கு முன்பு அவர்களின் சொத்தை பிரிக்கப் போவதாக தகவல் கிடைத்தது. அதில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை. இவரும், ஆர்வம் காட்ட மாட்டார். ‘இருப்பது போதும்’ என்று சொல்லிடுவார்.ஆனால் எனது உறவினர்கள் சிலர் மட்டுமல்ல, மாமியார் வீட்டு உறவினர்கள் சிலரும், ‘என்ன இருந்தாலும், அவன் அவர்களின் ரத்த வாரிசு. அவனுக்கும் சொத்தில் உரிமை இருக்கிறது. அதனால் அவனுக்கு உரிய பங்கை கேட்டு வாங்கு.

அவன் எதிர்காலம் நன்றாக இருக்கும். தம்பி, தங்கைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வான். நாளை அவனுக்கு விவரம் தெரிந்தால் பிரச்னை தானே’ என்று வற்புறுத்துகின்றனர்.சில நேரங்களில் அவையெல்லாம் எனக்கு நியாயமாக படுகின்றன. நாங்கள்தான் கஷ்டப்படுகிறோம். பிள்ளைகள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். என் முதல் கணவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி, 2 தங்கைகள். அவரது தம்பியும், சகோதரிகளும்,‘ சொத்து என்று யாராவது வந்தால் அவ்வளவுதான், கொலை தான் விழும்’ என்று மிரட்டுகிறார்களாம். அதே நேரத்தில் மாமனார், மாமியாருக்கு மட்டும் ‘ பேரனுக்கு ஏதாவது தரலாம்’ என்று மனநிலை உள்ளதாம்.

‘நீ எதுக்கும் கவலைப்படாதே... நீயும்... பிள்ளையும் வழக்கு போடுங்கள்... உங்கள் 2 பேருக்கும் பங்கு கிடைக்கும்’ என் உறவினர்கள் சொல்கிறார்கள். என் தாய்மாமா, ‘வழக்கு போடறது தப்பில்லை... முதலில் வீட்டுக்காரர்கிட்ட பேசு’ என்கிறார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்ட நான் முதல் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு கேட்க முடியுமா? மாற்று மத பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் நான், வேறு மதத்தில் இருந்து இறந்த கணவரின் சொத்தில் உரிமை கொண்டாட முடியுமா? மேலும் என் மகன் அந்த சொத்தின் சட்டப்படியான வாரிசா? அவன் பங்கு கேட்க முடியுமா? அவனும் மாற்று மதத்தில் வளர்வதால் சொத்தில் உரிமை உண்டா? சான்றுகளில் எல்லாம் எனது 2வது கணவரின் பெயர்தான் அப்பா என்ற இடத்தில் இருக்கிறது? அதனால் ஏதாவது பிரச்னை வருமா?

‘உரிமை இருக்கிறது’ என்று நேரடியாக போய் கேட்கலாமா? இல்லை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமா? என் முயற்சி நியாயமானதா எனக்கு ஒரு வழி காட்டுங்கள்?

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

முதலில் உங்கள் பெற்றோருக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன். நாகரீகம் இவ்வளவு வளர்ந்திருக்கும் இந்தக் காலத்திலும் பெண்களுக்கு மறுமணம் செய்து வைக்க யோசிக்கிறார்கள். ‘அதிலும் விதி விட்ட வழி… எல்லாம் கடவுள் முடிவு... நாம் என்ன செய்வது’ என்று யோசிக்காமல் உங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர், உறவினர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும் பணம், பொருளை விட அன்பை பெரிதாக நினைக்கும் உங்கள் கணவரும் போற்றுதலுக்குரியவர். அந்த வகையில் நீங்கள் நல்ல உறவு என்ற பெரும் சொத்துகளை பெற்று இருக்கிறீர்கள். அப்புறம் உங்கள் கேள்விக்கு வருகிறேன். உங்கள் மகன் சட்டப்படி உங்கள் கணவரின் ரத்த வாரிசாக இருக்கிறார். அவர் எங்கு எப்படி வாழ்ந்தாலும் அந்த உரிமையை மறுக்க முடியாது.

அவர் பிறப்பு சான்றிதழில் முதல் கணவரின் பெயர்தான் இருக்கும்.கூடவே உங்கள் திருமண போட்டோ, உங்கள் குழந்தையின் முதல் பிறந்தநாள் படங்களும் அதற்கு ஆதாரமாக இருக்கும். அதுமட்டுமல்ல, அவர்கள் பேரனை திருப்பிக் கொடுக்கச் சொல்லி காவல்நிலையத்தில் அவர்கள் கொடுத்த புகார் போன்றவை அவரது உரிமைக்கு வலு சேர்க்கும். திருமணம் ஆனவர் என்பதால் உங்கள் முதல் கணவரின் இறப்பு சான்றிதழில் உங்கள் பெயரும் இருக்கும்.

இருந்தால் அதுவும் உதவும்.கூடவே பூர்வீக சொத்து என்பதால் உங்கள் மகன் உரிமை கொண்டாட முடியும். அது மட்டுமல்ல அவர் இப்போது மேஜர் என்பதால் கட்டாயம் அவரே வழக்கு தொடரலாம். அதற்கு இந்த ஆதாரங்கள் உதவும்.அதேநேரத்தில் உங்கள் மாமனார், தான் சம்பாதித்த சொத்துகளாக இருந்தால்,  அவர் விருப்பப்படி விரும்பியவருக்கு எழுதி வைக்கலாம். அதில் உங்கள் மகன் உரிமை கோர முடியாது.

அதே நேரத்தில் நீங்கள் மதம் மாறி திருமணம் செய்தீர்களா, இல்லை பதிவு திருமணம் செய்தீர்களா என்ற விவரங்கள் கடிதத்தில் இல்லை. ஒரு மதத்தில் விதவை, மறுமணம் செய்தாலும் சொத்துரிமை கோர முடியும். இன்னொரு மதத்தில் அந்த வாய்ப்பு இல்லை. எனவே நீங்கள் உங்கள் முதல் கணவரின் சொத்தில் உரிமை கொண்டாடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. எனவே இந்த விவரங்களுடன் ஒரு வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெறுங்கள். உங்கள் மகன் விஷயத்திலும் எடுத்ததும் வழக்கு என்று போகாமல், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம். அதற்கு முன்பு, உறவினர்கள் மூலம் பேச்சு வார்த்தைகள் நடத்த முயற்சிக்கலாம்.

அதை விட முக்கியம், உங்கள் மூத்த மகனுக்கு, தனது பிறப்பு விவரங்கள் தெரியாது என்று கூறுகிறீர்கள். உங்கள் 2வது கணவரை தான் தனது அப்பாவாக நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சொத்துக்காக வழக்கு தொடரும் போது அவருக்கு அந்த விவரங்கள் தெரிய வரலாம். அவற்றை அவர் எளிதில் எடுத்துக் கொள்வாரா? என்று தெரியவில்லை.

அப்படி இல்லை... என்றால் அதனால் அவருக்கு மனச்சிக்கல்கள் ஏற்படலாம். மற்ற பிள்ளைகளுடன், அப்பாவுடன் இணக்கம் குறைய நேரலாம். கூடவே உங்களின் இந்த முயற்சியை உங்கள் கணவர் விரும்புவாரா என்பதையும் யோசியுங்கள். உங்கள் 3 பிள்ளைகளையும் அவரது பிள்ளைதான் என்றே எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

அது இல்லை என்றாகும் போது அவரது மனநிலை என்னவாகும் என்றும், அவருக்குசமூகத்தில் ஏற்படும் சங்கடங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுங்கள். எதையும் யோசித்து நன்றாக முடிவெடுக்கும் போது அது நிச்சயம் பலன் தரும். எனவே வழக்கறிஞரை தொடர்பு கொள்ளும் முன்பு, உங்கள் கணவரிடம் பேசுங்கள். கூடவே உங்கள் குடும்பத்தில் தெளிவான முடிவுகளை எடுத்த  உங்கள்  தாய்மாமாவிடமும்  பேசினால், கூடுதலாக நல்ல ஆலோசனைகள் பெறலாம்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி

பகுதிக்கான கேள்விகளை எழுதி

அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

தபால் பெட்டி எண்: 2924

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

>