கொல்லிமலை மலைப்பாதைகொல்லிமலை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்தது-3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேந்தமங்கலம் : கொல்லிமலை மலைப்பாதையில் 61வது கொண்டை ஊசி வளைவில், மரம் முறிந்து விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், அரப்பளீஸ்வரர் கோயில் எதிரே ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவிகளில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை பெய்தது.

அப்போது, 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில், 61வது கொண்டை ஊசி வளைவில் உள்ள மரம், வேரோடு முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் கொல்லிமலை பிரதான சாலையில், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறையினர், சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். அதன் பின்னர், வாகனங்கள் வழக்கம் போல் சென்றன. மரம் முறிந்து விழுந்ததால், அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை, சுமார் 3 மணி நேரம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: