பொங்கலோ பொங்கல்...

நன்றி குங்குமம் தோழி

நாம் வருடம் தோறும் பொங்கலுக்கு ‘சர்க்கரைப் பொங்கல்’, வெண் பொங்கல், பால் பொங்கல் என செய்து சூரியனுக்கு படைத்து, கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த பொங்கலுக்கு புதுவிதமான, சத்தான, சுவை மிகுந்தப் பொங்கலைச் செய்து அசத்துங்கள் தோழிகளே...

அவல் முந்திரி பொங்கல்

தேவையான பொருட்கள்

அவல் - 1/4 கிலோ,

முந்திரிப்பருப்பு,

உளுந்தம் பருப்பு - 5 மேஜைக் கரண்டி,

மிளகு - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

சீரகம் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

பெருங்காயம்,

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,

நெய் - 150 கிராம்.

செய்முறை

அவலை சுத்தம் செய்து 2 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். உளுந்தம்பருப்பை வெதுவெதுப்பான சுடுநீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரியை பொடிக்கவும். ஊறிய அவலில் உப்பு, பச்சை மிளகாயை சேர்க்கவும். சீரகம், மிளகை பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, உளுந்தம் பருப்பை வேக விடவும். வெந்ததும் அத்துடன் அவலைச் சேர்த்து சிறு தீயில் வைத்து கிளறவும். ஒரு வாணலியில் நெய் விட்டு பொடித்த முந்திரி, பெருங்காயம், சீரகத்தூள், தட்டிய மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அவல்,  உளுந்தப்பருப்பு கலவையைக் கொட்டி, நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

புளிப் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி நொய் - 400 கிராம்,

புளி - 50 கிராம்,

மிளகாய் வற்றல் - 7,

பெருங்காயம் - சிறிதளவு,

நல்லெண்ணெய் - 100 மில்லி,

உப்பு - தேவைக்கு,

கடுகு - 1/2 டீஸ்பூன்,

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

5 டம்ளர் தண்ணீரில் புளியை நன்றாகக் கரைத்து வடிகட்டவும். அரிசி நொய்யை சுத்தம் செய்து அதில் கரைத்துள்ள புளித்தண்ணீரை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து பாத்திரத்தில் உள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள் போட்டு மிதமான தீயில் நன்கு வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். வெந்தபின் கீழே இறக்கி வைத்து, நல்லெண்ணெயை சுட வைத்து புளிப் பொங்கலில் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். இந்த புளிப்பொங்கலை சூடாகச் சாப்பிட மிக சுவையாய் இருக்கும்.

பருத்திக்கொட்டை பொங்கல்

தேவையான பொருட்கள்

பருத்திக்கொட்டை - 1/2 கிலோ,

வெல்லம் - 350 கிராம்,

பச்சரிசி - 200 கிராம்,

தேங்காய்த்துருவல் - 1/2 கப்,

வறுத்து பாதியாக பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்,

சுக்குப்பொடி -  1/2 டீஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.

நெய் (அ) டால்டா - 100 கிராம்.

செய்முறை

பருத்திக்கொட்டையை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் காலை ஆட்டுரலில் போட்டு நன்றாக ஆட்டிப் பருத்திப்பால் எடுத்து, வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டியில் பருத்திப்பாலை ஊற்றி அடுப்பில் நன்றாக கொதிக்கவிடவும். பிறகு அதில் பச்சரிசியை சேர்த்து 3/4 பாகத்துக்கு மேல் வெந்தபின் வெல்லத்தை நசுக்கிப் போட்டு, சிறு தீயில் நன்றாகக் கலக்கவும். கலவை கொதித்து கெட்டியாக வரும் சமயத்தில் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இவற்றைப் போட்டு நெய் விட்டு நன்றாகக் கலக்கவும். ஒரு சிட்டிகை உப்புத்தூள் சேர்க்கலாம்.

இனிப்பு ரவைப் பொங்கல்

தேவையான பொருட்கள்

ரவை - 1/4 கிலோ,

கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி,

நெய் - 150 கிராம்,

சர்க்கரை - 300 கிராம்,

ஏலக்காய் - 4.

செய்முறை

ரவையை சலித்து சுத்தப்படுத்தவும். கடலைப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீர் கொதித்ததும், கடலைப்பருப்பைக் கொட்டி, வேக விடவும். கடலைப்பருப்பு பாதி வெந்து வருகையில் சர்க்கரையைக் கொட்டி கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை பாகாகி இறுகி வருகையில் ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்து பாயசம் போல் வருகையில் நெய் முழுவதும் ஊற்றி ஏலக்காயைத் தட்டிப்போட்டு இறக்கவும். பால் சேர்க்க விரும்பினால் தண்ணீர் அளவைக் குறைத்துப் பாலைச் சேர்க்கவும்.

தினை இனிப்புப் பொங்கல்

தேவையான பொருட்கள்

தினை அரிசி - 200 கிராம்,

பாசிப்பருப்பு - 100 கிராம்,

வெல்லம் - 200 கிராம்,

நெய் - 50 கிராம்,

சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,

முந்திரி - 8,

திராட்சை - 10.

செய்முறை

பாசிப்பருப்பு, தினை அரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதித்ததும், ஊற வைத்த பாசிப்பருப்பை வேக விடவும். பாதி வெந்ததும் ஊறிய தினை அரிசியை பருப்புடன் சேர்த்து வேகவிடவும். தினை அரிசி நன்கு வெந்து வரும் வரை கிளறவும். பின் வெல்லத்தை பொடித்து நன்றாக கலந்து, இறக்கி, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சையை வதக்கி பொங்கலில் கொட்டவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.

சாமை மிளகு பொங்கல்

தேவையான பொருட்கள்

சாமை அரிசி - 1/2 கப்,

பாசிப்பருப்பு - 1 கப்,

இஞ்சி - 1 சிறிய துண்டு,

நெய்,

உப்பு - தேவைக்கேற்ப.

மிளகு - 3 டீஸ்பூன்,

சீரகம் - 2 டீஸ்பூன்,

முந்திரி - 10 (அ) 12.

செய்முறை

சாமை அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக பாத்திரத்தில் போட்டு சுத்தம் செய்து, தேவையான அளவு உப்பு, தண்ணீரை சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரை வேகவிடவும். இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு காய்ந்ததும், சீரகம், இஞ்சி, மிளகு, முந்திரி இவற்றை தாளித்து குக்கரில் உள்ள சாமைப் பொங்கலில் கொட்டிக் கலக்கவும்.

கேரட் பொங்கல்

தேவையான பொருட்கள்

கேரட் - 200 கிராம்,

பச்சரிசி - 400 கிராம்,

தேங்காய் - 1 மூடி,

சர்க்கரை - 300 கிராம்,

நெய் - 100 கிராம்,

ஏலக்காய் - 6,

முந்திரி - 15,

கிசுமுசுப்பழம் - 20.

செய்முறை

கேரட்டைக் கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும். தேங்காயையும் துருவவும். வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் கிசுமுசுப்பழம், இரண்டாக உடைந்த முந்திரியைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவல், கேரட் துருவலை தனித்தனியாக வறுக்கவும். ஏலக்காயை பொடியாக தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும், அரிசியை போட்டு வேகவிடவும். 3/4 பாகம் வெந்தவுடன் சர்க்கரையை போட்டுக் கிளறவும். பிறகு துருவி வைத்துள்ள கேரட், தேங்காய் போட்டு நெய்யை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டுக் கிளற வேண்டும். எல்லாம் ஒன்றாகக் கலந்தபின், பதமாக வந்ததும் முந்திரி, கிசுமுசுப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

பாசிப்பருப்பு ரவா வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 200 கிராம்,

ரவை - 150 கிராம்,

பச்சை மிளகாய் - 2,

காய்ந்த மிளகாய் - 2,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய்,

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,

சீரகம் - 1 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,

இஞ்சி - 1 சிறு துண்டு,

மிளகு - 1 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் ரவையையும், பாசிப்பருப்பையும் சுத்தம் செய்து அடுப்பில் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். இஞ்சியைக் கழுவி சிறு சிறு துண்டாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயை வதக்கவும். பின் சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், இஞ்சித்துண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதங்கிய பின் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அதில் வறுத்தப் பருப்பு, உப்பு சேர்த்து வேக விடவும். பருப்பு நன்றாக வெந்ததும் ரவை வேகும் அளவுக்கு தண்ணீர் இல்லை என்றால் தேவையான அளவு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதித்தப்பின் ரவையைக் கொட்டி சிறு தீயில் நன்றாகக் கலக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால் பரிமாறும்போதே நெய் சேர்க்கலாம். இதனுடன் தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

தொகுப்பு: என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

>