கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனை சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு நர்ஸ்களுடன் சுற்றுலா சென்ற டாக்டர்: மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விசாரணை

கோபி: கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனை சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு, நர்ஸ்களுடன் சுற்றுலா சென்று ஜாலியாக இருந்த தலைமை டாக்டரிடம் விசாரணை நடந்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை தலைமை டாக்டராக, பவானி குருப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த தினகர் (57) உள்ளார். இவரை தவிர முதுநிலை உதவி டாக்டர்களாக 4 பேரும், 6 நர்ஸ்களும் பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனைக்கு கவுந்தப்பாடி சுற்றுவட்டாரங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், தலைமை டாக்டர் தினகர், நேற்று முன்தினம் பணிக்கு வராமலும், முறையாக விடுப்பு எடுக்காமலும் மருத்துவமனை நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மருத்துவம் படித்துவிட்டு ஹவுஸ் சர்ஜனாக உள்ள அவரது மகன் அஸ்வின் (24) என்பவரை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறிச்சென்றுள்ளார். அஸ்வினும் காலை முதல் இரவு வரை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலியால் அவதிப்பட்ட கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சை பெற சென்றுள்ளார். அவருக்கு புறநோயாளிகள் பிரிவில் பதிவு செய்து டோக்கன் வழங்காமலே சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது முருகேசன், தலைமை டாக்டர் குறித்து விசாரித்தபோது, அவர் பவானி அரசு மருத்துவமனையில் அரசு டாக்டராக பணிபுரிந்து வருவதாகவும், மாற்று பணிக்காக தான் வந்துள்ளதாகவும் அஸ்வின் கூறி உள்ளார்.

இந்நிலையில் மகன் சிகிச்சை அளிக்கும் விபரம் வெளியே தெரிய வந்ததை தொடர்ந்து தலைமை டாக்டர் தினகர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கு புகார் அளித்த நோயாளி முருகேசனை, அவர் அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டரே போலியாக மகனை சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு விடுமுறையை கொண்டாட சென்றதும், அரசு டாக்டர் எனக்கூறி தினகரின் மகன் சிகிச்சை அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது பற்றிய தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கோமதி சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேற்று மதியம் வந்தார். தலைமை டாக்டர் திலகரின் அறையில் விசாரணை நடத்தினார். டாக்டர் மற்றும் நர்ஸ்களிடம் விசாரணை நடந்தது.

Related Stories: