பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு விண்ணப்பம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்

சென்னை: நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கவுன்சலிங்கில் விருப்ப மாறுதல் கேட்டு 82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சலிங் நடக்கும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்தி அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கும் வாய்ப்பை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது.

அதன்அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டு பொதுமாறுதல் கவுன்சலிங்கில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் இணைய தளம்வழியாக தங்கள் விண்ணப்பங்களை 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் 25ம் தேதி வரையில் தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களில் 18 ஆயிரத்து 920 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கும், 9 ஆயிரத்து 295 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கும், 5 ஆயிரத்து 814 பேர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களுக்கும், 1640 பேர் நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 ஆயிரத்து 711 பேர் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலுக்கும், 17 ஆயிரத்து 296 பேர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலுக்கும், 1186 பேர் உயர்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கும், 176 பேர் உடற்கல்வி இயக்குநருக்கும், 989 பேர் இடைநிலை மற்றும் இதர ஆசிரியர் மாறுதலுக்கும் விண்ணப்பித்துள்ளனர். தொடக்க கல்வித்துறையை பொருத்தவரையில் 16 ஆயிரத்து 183 விண்ணப்பங்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் கேட்டும், 6448 விண்ணப்பங்கள் கல்வி மாவட்டத்துக்குள்ளும், 6185 விண்ணப்பங்கள் மாவட்டத்துக்குள்ளும், 6853 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கேட்டும் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் ஆசிரியர்களில் 27 ஆயிரத்து 750 பேர் மாவட்டத்துக்குள் மாறுதல் கேட்டும், 19060 பேர் மாவட்டம் விட்டு மாவட்டம் கேட்டும், விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களின் பேரில் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டு மாறுதல் கவுன்சலிங் நடக்கும். கவுன்சலிங் நடக்கும் நாள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும். மேலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் மேனிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களுக்கான பதிவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

The post பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு விண்ணப்பம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: