பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த உலகின் முதல் ‘நாசி’ தடுப்பூசி சோதனை நிறைவு: விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்

புதுடெல்லி: உலகின் முதல் நாசி தடுப்பூசியின் பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் அந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பெருமளவில் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எல்லா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கோவிட் - 19 தடுப்பூசியின் அடுத்தகட்ட நகர்வாக நாசி (மூக்கின்) மூலம் செலுத்தப்படும் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளது. அதன் தரவை அடுத்த மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளரிடம் எங்களது நிறுவனம் சமர்ப்பிக்கும். திட்டமிட்டப்படி எல்லாம் சரியாக நடந்தால், உலகின் முதல் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட நாசி கோவிட்-19 தடுப்பூசியாக இருக்கும்’ என்றார்.

முன்னதாக இந்த ஆண்டு ஜனவரியில் நாசி தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்த இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி அளித்திருந்தது. கொரோனாவுக்கு எதிரான இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு கூட முதலில் இரண்டு டோஸ் தடுப்பூசியானது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்காது; ஆனால் மூன்றாவது டோஸ் தடுப்பூசியானது அற்புதமான ரிசல்டை அளிக்கிறது. கொரோனாவை 100 சதவிகிதம் ஒழிக்க முடியாது. அது அப்படியே இருக்கும்; நாம் தான் அதனுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது இன்னும் விடைதெரியாத புதிராகவே இருக்கிறது’ என்றார்.

Related Stories: