ஆனைமலை பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு

ஆனைமலை: ஆனைமலை வழியாகச் செல்லும் உப்பாறு மற்றும் ஆழியார் ஆற்றில் கழிவுநீர் கலந்து வருவதால், ஆற்றை சுற்றிலும் ஆகாயத்தாமரை படர்ந்து வருவதோடு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரும் மாசடைந்து வந்தது. எனவே, ஆனைமலை வழியாகச் செல்லும் உப்பாறு மற்றும் ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஆற்றில் கழிவுநீர் கலக்கும் 6 இடங்களை பேரூராட்சி அதிகாரிகள் தேர்வு செய்து அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு தலைமையில் குழுவினர் நேற்று ஆனைமலையில் ஆய்வு மேற்கொண்டனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள வெப்பரை ரோடு, மயான ரோடு, இந்திரா நகர், ஹக் லே-அவுட், மாசாணியம்மன் கோயில் ஆகிய பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் கார்த்திக் கோகுல், செந்தில்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா, ஆனைமலை பேரூராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், ஆனைமலை பேரூராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, பேரூராட்சி மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பின்னர், இடங்களை அளவீடு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும், அரசு நிதி ஒதுக்கிய உடன் விரைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: