பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன -மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, ஆனைமலை தாலுகா பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளி மற்றும் சுயநிதி  பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்களை தவிர, 1 முதல் 9ம் வகுப்பு வரை படித்த  மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு நிறைவடைந்தவுடன், கடந்த மே மாதம் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் 12ம் தேதியுடன் கோடை விடுமுறை முடிந்து, நேற்று முதல் மீண்டும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்தந்த அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வந்திருந்தனர். கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் வகுப்புகள் துவங்கப்பட்டன.முன்னதாக, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வரிசையாக நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளுக்கு சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின் கோடை விடுமுறைக்கு முடிந்து பள்ளிகளுக்கு வந்த சக மாணவர்கள், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பள்ளி திறக்கப்பட்டதை தொடந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் இலவச முப்பருவ பாடத்திட்டத்தில், முதல்பருவ பாட புத்தகம் வினியோக பணி துவங்கியது. இதில் பல அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதில், வடக்கு ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டியில், மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  இதற்கு, வெள்ளாளபாளையம் ஊராட்சி தலைவர் பத்மபிரியா தலைமை தர்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர்  கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரைந்து புதுபிக்கப்பட்டிருந்தது. அவை திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டது.

புதிய கட்டிடத்தை ஊராட்சி தலைவர்  திறந்து வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரஷ்யா பீபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி திறப்பான நேற்று, வகுப்பறைக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டதுஇது குறித்து கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில்,`பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், கோடை விடுமுறைக்கு பின் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை குறித்து  தினமும் ஆய்வுமேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மாணவர்கள் வசதிக்காக பள்ளியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், போதிய அடிப்படை வசதியுடன் வைத்திருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் ஏதேனும் குறையிருந்தால் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும் என அந்தந்த பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது’ என்றனர். 

Related Stories: