‘ப்ராஜெக்ட் புளூ’ திட்டத்தின் கீழ் உத்தண்டி, மெரினா, பெசன்ட் நகர் உட்பட 6 கடற்கரைகளை அழகுபடுத்த முடிவு: சென்னை மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், ப்ராஜெக்ட் புளூ திட்டம் மூலம் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர், உத்தண்டி உட்பட 6 கடற்கரைகளை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சர்வதேச தரத்துக்கு இணையாக சீரமைக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் பெருமளவில் மரங்கள் நடுதல், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களை புனரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக கொண்டு வருதல், பாரம்பரிய கட்டிடங்களை புனரமைத்து வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல், பாலங்களின் கீழ்ப்பகுதிகள், சாலை இணைப்புகள் மற்றும் சாலை மையத்தடுப்புகளை அழகுபடுத்துதல், நகரின் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் நடைபாதைகளை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ப்ராஜெக்ட் புளூ’ திட்டம் மூலம், சென்னை மாநகரின் கடற்கரைகள் விரைவில் அழகாக மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது, நீர் விளையாட்டுகளை உருவாக்குதல், கடலுக்கு அடியில் மீன் அருங்காட்சியகம், கடற்கரையை அழகாக மாற்றுவது போன்றவை பயோராக் டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தில் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர், உத்தண்டி உள்பட 6 கடற்கரை பகுதிகளை தேர்வு செய்து அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 21.6 கி.மீ.கடற்கரைப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடற்கரை பகுதியில் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செல்ல சர்வீஸ் சாலையில் நிழலான மற்றும் அமைதியான பாதையை உருவாக்குவதனுடன் கடற்கரையில் விற்பனை வண்டிகளை அறிமுகப்படுத்துவது இத்திட்டத்தில் ஒன்றாகும். மேலும் இத்திட்டத்தின் முக்கிய திட்டமாக மாற்றுதிறனாளிகள் எளிதாக கடல் அலையை பார்வையிட தளங்கள் அமைப்பது ஆகியவை கடற்கரை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.அதுமட்டுமல்லாமல் திருவிக நகர் பாலத்தில் இருந்து பார்க்கும் வகையில் அடையாறு ஆற்றில் நீர் ஊற்றுக்கான திட்டங்களும் செயல்படுத்த யோசனைகளை மேற்கொண்டு அவற்றின் சாத்தியக் கூறுகளை பற்றி ஆராய்ந்து வருகிறோம். சமீபத்தில் இதுபற்றி மாநகராட்சி கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளனர். கடற்கரையை அழகுப்படுத்தும் திட்டங்களை தவிர இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு, பாராம்பரியம், கல்வி, கலாச்சாரம், மற்றும் சுகாதார திட்டங்கள் ஆகியவை அடங்கும். மேலும் புதிய பூங்காக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: