புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏ அறையில் தீ விபத்து- பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏ அறையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா அலுவலகம் உள்ளது. இதை ஒட்டி உப்பளம் தொகுதி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடியின் அறை உள்ளது. இவரது அறையில் உள்ள ஏசியின் அவுட்டோர் யூனிட்டில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளிக்கவே பொதுமக்கள், சட்டசபை காவலர்கள் உடனே புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடனே ஏசியின் அவுட்டோர் யூனிட்டில் ஏற்பட்ட தீ விபத்தை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் எம்எல்ஏ அலுவலகத்துக்குள் எந்தவித சேதமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இச்சம்பவத்தால் அங்கிருந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள், சட்டசபை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: