கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியர் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோயில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து பயன்பெறுவோர் எண்ணிக்கை உயர்த்தப்படாத நிலையில் கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோயில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோயில் பூசாரிகள் நல சங்க தலைவர் வாசு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கிராமப்புற கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது கடந்த 2000க்கு பிறகு இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. இந்த வரம்பை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம், ஓய்வூதியம் கோரி நீண்டகாலமாக காத்திருக்கும் ஏழை பூசாரிகள் பயனடைவர். கிராமப்புற கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்க வயது வரம்பை 18 ஆக  குறைக்க வேண்டும். கிராமப்புற கோயில் நலவாரிய உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் திருப்பணி நிதி ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். கிராம கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு வட்டார அளவில் ஆண்டுதோறும் 15 நாட்கள் வழிபாட்டு பயிற்சி முகாம் நடத்த வேண்டும்.  கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த பட்சம் 3 எரிவாயு சிலிண்டர்களை பட்டியலில் சேராத வருமானம் இல்லாத கோயில்களுக்கு வழங்க வேண்டும்.  அனைத்து கோயில்களுக்கும் விலையின்றி அன்னை தமிழில் அர்ச்சனை கையேடு பூசாரிகளுக்கு வழங்க வேணடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: