பெண் டாக்டர் தற்கொலை வழக்கு கணவருக்கு 10 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்திய ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம், கொல்லம் அருகே  உள்ள நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன் நாயர். இவரது மகள் விஸ்மயா (24). ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 2020, மே 30ம் தேதி இவருக்கும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் கிரண் குமாருக்கும் (31) திருமணம் நடந்தது. 100 பவுன் நகை, ரூ. 10 லட்சம் பணம், பொருட்கள், சொகுசு கார் வரதட்சணையாக பேசப்பட்டது.

ஆனால், 70 பவுன் நகையும், கிரண் குமார் கேட்ட காருக்கு பதிலாக வேறு மாடல் காரும் மட்டுமே கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், கிரண்குமார் கொடுமைபடுத்தியதால், கடந்தாண்டு ஜூன் 21ம் தேதி விஸ்மயா தூக்கு போட்டு  தற்கொலை செய்தார். கிரண்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கிரண் குமாருக்கு நீதிபதி சுஜித் நேற்று 10 ஆண்டு சிறையும், ரூ. 12.55  லட்சம் அபராதமும் விதித்தார். விஸ்மயாவின் தாய் சஜிதா கூறுகையில், ‘தீர்ப்பில் திருப்தி இல்லை. ஆயுள் தண்டனை தருவார்கள் என கருதினோம். தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்,’ என்றார்.

Related Stories: