ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு நடந்த சம்பவம் பெண் டாக்டர் பலாத்கார கொலையில் 4 குற்றவாளிகளும் போலி என்கவுன்டர்: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் அறிக்ைக

திருமலை: ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு பெண் டாக்டரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் 4 குற்றவாளிகள் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத், டோண்டுப்பள்ளியில் உள்ள சுங்கச்சாவடி அருகே கடந்த 2019ம் ஆண்டில் 27 வயதான கால்நடை பெண் டாக்டர் திஷா கடத்தப்பட்டார். தொடர்ந்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஐதராபாத் புறநகரில் உள்ள ஷாட்நகர் அருகே சதன்பள்ளியில் மேம்பாலத்தின்கீழ் எரித்து கொல்லபட்டார்.

 இதையடுத்து, கடந்த 2019ல் நவம்பரில் டாக்டரை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முகமது ஆரிப், சிந்தகுண்டா சென்னகேசவுலு, ஜோலுசிவா மற்றும் ஜொல்லுநவீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை குற்றம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரிக்க 2019ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அழைத்து சென்றனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றதாக என்கவுண்டர் செய்ததில் 4 பேரும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். என்கவுண்டர் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நீதிபதி சிர்புர்கர் ஆணையம் அமைக்கப்பட்டது.

கொரோனாவால் 2019ல் மார்ச் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் விசாரணையை ஆணையத்தின் உறுப்பினர்களால் ஸ்பாட் இன்ஸ்பெக்‌ஷன் செய்ய முடியவில்லை என்று ஜூலை 2020ல் ஆணையம் கூறியது. இந்நிலையில், இந்தாண்டு ஜனவரியில் தனது  சீலிடப்பட்ட அறிக்கையை கவரில் உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் சமர்ப்பித்தது. இதில், ஐதராபாத்தில் 2019ல் கால்நடை மருத்துவர் திஷாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரை போலீசார்  தப்பியோட முயன்றதாக கூறி  என்கவுண்டர் செய்தது போலியானது.

குற்றவாளிகளை திட்டமிட்டு கொன்றதற்காக 10 காவல்துறை அதிகாரிகள் மீது கொலை குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைத்துப்பாக்கியை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றதாக கூறும் காவல்துறையின் கூற்று நம்ப முடியாதது. அதற்கான ஆதாரங்கள் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை  கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே சுட்டு கொன்றுள்ளனர். இதனால், என்கவுண்டரில் பங்கேற்ற உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 10 பேர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த  போலீசாருக்கு பொதுமக்கள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் போலீசார் திட்டமிட்டு கொலை செய்ததாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: