சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ஆபத்தான முறையில் பாலத்தைக் கடக்கும் வாகன ஓட்டிகள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்த நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள, தாளவாடி, தொட்டகாஜனூர், சிமிட்டஹள்ளி,பனஹள்ளி, கல்மண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஓடைகள், பள்ளங்கள் மற்றும் வனப்பகுதி வழியாக செல்லக்கூடிய காட்டாறுகளில் செந்நிற மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலங்களை செந்நிற மழைநீர் மூழ்கடித்துச் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக எல்லையில் உள்ள கும்டாபுரம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் தரைபாலத்தை வாகனங்களால் கடந்து சென்றனர். ஜீப், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தரைபாலத்தை கடக்கும் போது, ஆற்று நீரில் அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது. எனவே தாளவாடி மலைப்பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும்  தரைபாலங்களை அகற்றிவிட்டு, உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்பது தாளவாடி மலைப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.       

Related Stories: