சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் மற்றும் தார் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்யும் கனமழையால் ஓடை மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓடைகளின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கஹள்ளி பகுதியில் ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் மீது மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தரைப்பாலம் சேதமடைந்தது.
