மேலூர் அருகே குண்டும், குழியுமாய் கிடக்கும் நான்கு வழிச்சாலை: தடுமாறும் வாகன ஓட்டிகள்

மேலூர்: மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் நான்கு வழிச்சாலை, போக்குவரத்து நெரிசல் இன்றியும், விரைவாக செல்லவும் அமைக்கப்பட்டது. இச்சாலையை பராமரிப்பதாக கூறி, ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து, வாகனஓட்டிகளிடம் அடாவடி வசூல் செய்யப்பட்டு வருகிறது. சாலை பழையதாக பழையதாக, சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டிய தேசிய போக்குவரத்து ஆணையம், ஆண்டுதோறும் சுங்க கட்டணத்தை உயர்த்தி வாகனஓட்டிகளை மிரட்டி வருகின்றனர்.அதிகரிக்கும் சுங்க சாவடி கட்டணத்திற்கு ஈடாக வாகனஓட்டிகளுக்கு வசதிகளை அதிகரிக்க வேண்டிய நிலையில், இருக்கும் சாலையையும் சீர்செய்யாமல் வாகனஓட்டிகளை அவதியில் விட்டுள்ளனர்.

மேலூர் கருங்காலக்குடி அருகே சாவரப்பட்டி பிரிவிற்கும், குன்னங்குடிபட்டி பிரிவிற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இரு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. அதிவேகமாக வரும் கனரக வாகனங்கள் இந்த குழியில் வாகனத்தை இறக்காமல் இருப்பதற்காக, சட்டென வலது அல்லது இடது புறமாக வாகனத்தை திருப்புகின்றனர். இதனால் இந்த வாகனத்தின் பின்னால் வரும் வாகனங்கள் எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

கடந்த ஒரு மாதமாக இந்த சிதிலம் உள்ள நிலையில், தினசரி சுங்கச்சாவடி ரோந்து வாகனங்கள் இதை பார்த்தும், பார்க்காதது போல் சென்று கொண்டே உள்ளது.மேலும் இவ்விடத்தில் சாலை ஓரமாக உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்விடத்தை கடக்க முயலும் போது டூவீலர்கள் சறுக்கி விழும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உடனடியாக இச்சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: