வால்பாறையில் கோழிக்கூண்டின் அருகில் இறந்து கிடந்த சிறுத்தை-வனத்துறை விசாரணை

வால்பாறை : வால்பாறையில் கோழிக்கூண்டின் அருகில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ளது வறட்டுப்பாறை எஸ்டேட். சாலையோரம் உள்ள டீக்கடை ஒன்றின் பின்புறம் கோழி கூண்டு உள்ளது. நேற்று அதிகாலை வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் வேட்டையாட வந்துள்ளது. கோழி கூண்டின் உள்ளே உள்ள கோழிகளை பிடிக்க முயன்றபோது உயிரிழந்துள்ளது. தொடர்ந்து சிறுத்தை அதே பகுதியில் கடந்த சில நாட்களாக நடமாடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுத்தை கோழி வேட்டையின்போது உயிர் இழந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை வனத்துறைக்கு ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நேற்று ஆனைமலை புலிகள் காப்ப துணை கள இயக்குநர், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் சமபவயிடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகள் வால்பாறையில் முகாமிட்டு உள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தையின் உடலை வனத்துறையினர் மீட்டு ரொட்டிக்கடை எஸ்டேட்டில் உள்ள வனத்துறை முகாமில் வைத்துள்ளனர். சிறுத்தை வேட்டையின்போது மின்சாரம் தாக்கியதா? அல்லது வேறேதும் காரணமா? என வனத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 4 வயது ஆண் சிறுத்தைக்கு இன்று உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளது. இதன்பின்னர்தான் உயிர் இழப்பிற்கு காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: