அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் திருடு போன 126 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

அண்ணாநகர்: அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் திருட்டுப்போன 126  செல்போன்களை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, மதுரவாயல், கோயம்பேடு, வில்லிவாக்கம், ராஜமங்கலம், கொளத்தூர், திருமங்கலம், நொளம்பூர், ஜே.ஜே.நகர் பகுதிகளில் செல்போன்கள்  அடிக்கடி திருட்டுப்போனது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, அண்ணா நகர் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்தனர். மேலும் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் தலைமையில், சைபர் கிரைம் போலீசார் திருட்டுப்போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. நம்பர்களை வைத்து பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி, மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் மும்பை, கேரளா, ஐதராபாத், ஒடிசா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் 126 செல்போன்களை சைபர் க்ரைம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணை கமிஷனர் சிவபிரசாத் கலந்துகொண்டு மீட்கப்பட்ட 126 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

அண்ணாநகர் துணை ஆணையர் சிவபிரசாத் கூறும்போது, ‘’அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கடந்த  3 மாதங்களில் திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரை நியமித்து திருட்டு போன செல்போன்களை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். திருட்டுப்போன செல்போன்களை பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீசாரை பாராட்டுகிறேன்’ என்றார்.

Related Stories: