மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு முதல் கட்டமாக 1,627 கோடி ரூபாய் ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்!

மதுரை : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முதல் கட்டமாக ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ரூ.1,627 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் 3 ஆண்டுகளாகியும் ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பற்றி முழு விவரங்களை தரும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஒன்றிய அரசிடம் கேட்டு இருந்தார். சு.வெங்கடேசன் விவரங்கள் கேட்ட நிலையில் ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த திட்ட மதிப்பான ரூ.1977 கோடியில் ஜைக்கா நிறுவனம் மட்டும் ரூபாய் 1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் கட்டப்பட உள்ள நிலையில் மீதி நிதியை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் தமிழகத்தில் விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: