அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் மதசார்பற்ற கட்சிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு

புதுச்சேரி: புதுவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற முற்போக்கு கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் இருந்து கருப்புக்கொடிகளை போலீசார் பறித்தால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். தமிழை பழித்து இந்தியை திணிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவை வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இடதுசாரிகள் அறிவித்திருந்தனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவிந்திருந்தது. அதன்படி இன்று காலை சாரம் அவ்வை திடலில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், விஸ்வநாதன், சிபிஐ மாநில செயலார் சலீம், சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், சிபிஐ (எம்-எல்) செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுவையை வஞ்சிக்கும் இந்தியை திணிக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடியுடன் அமித்ஷாவே திரும்ப போ என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கருப்பு கொடிகளை பறித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பலூன் வியாபாரி கைது

புதுச்சேரிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் இன்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் விடுவதற்காக அழைத்து வரப்பட்ட ஜெய்சங்கர் என்ற பலூன் வியாபாரியை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ஒரு பாக்கெட் கருப்பு பலூன் மற்றும் இரண்டு சிறிய சிலிண்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: