சூறைகாற்றுடன் கன மழை திருச்சியில் வாழை மரங்கள் சேதம் ஏற்காட்டில் மின்கம்பங்கள் முறிந்தன: ஒகேனக்கல்லில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

சென்னை: டெல்டா மாவட்டத்தில் சூறைகாற்றுடன் பெய்த மழையால் திருச்சியில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சேதமானது. ஏற்காட்டில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 67 மலை கிராமங்கள் இருளில் மூழ்கின. தமிழகம் முழுவதும் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. திருச்சியில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. முசிறி, திருவெறும்பூர், ரங்கம், சமயபுரம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நேந்திர வாழை மரங்கள் தாரோடு முறிந்து சேதமடைந்தன.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில்  லேசான தூறல் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் கரூர், வெங்கமேடு, காந்திகிராமம், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்றுமுன்தினம் இரவு 8.45 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கனமழையால் மின்கம்பிகளும் மரங்களும் சாலையில் ஆங்காங்கே உடைந்து விழுந்தன. இதனால் ஏற்காட்டில் உள்ள 67 மலை கிராமங்களிலும் மின்தடை ஏற்பட்டது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 30 கிராமங்களுக்கு மேல் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகளும் உரிய நேரத்தில் ஊர் செல்ல முடியாமல் தவித்தனர்.  மாவட்டத்தில் அதிகபட்சமாக இடைப்பாடியில் 50 மி.மீ., ஏற்காட்டில் 45.2 மி.மீ. மழை பதிவானது.

ஒகேனக்கல்லில்: நேற்று மாலை சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஒகேனக்கல் அடுத்த சத்திரம் பகுதியை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன்(53), ஒகேனக்கல் தொங்கு பாலம் செல்லும் வழியில் மரத்தடியில் கடை போட்டு பொரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று மழையின் போது, அந்த மரத்தின்மீது இடி, மின்னல் தாக்கியதில் அர்த்தநாரீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: