லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு.: ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமின் ரத்து...உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கோரியில் கடந்த ஆண்டு அக்.3-ல் விவசாயிகள் மீது ஆசிஷ் மிஸ்ரா கார் ஏற்றி 4 பேர் உயிரிழந்தனர். காரை ஏற்றி அமைச்சர் மகன் 4 விவசாயிகளை கொன்ற விவரகம் நாடு முழுவதும் கடந்த ஆண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆசிஷ் மிஸ்ராவுக்கு கடந்த பிப்.10-ல் ஜாமின் வழங்கியது. ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகள், வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 4-ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜாமின் ரத்தானதை அடுத்து ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மீண்டும் புதிதாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கருத்தை அறிந்த பிறகே ஆசிஷ் மிஸ்ரா ஜாமின் குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  

லக்கிம்பூர் கலவர வழக்கில் ஆசிஷ் மிஸ்ரா ஜாமின் ரத்தால் அவரது தந்தை ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் பதவியை அஜய் மிஸ்ரா விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: