குடியாத்தம் சிரசு திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

குடியாத்தம்: குடியாத்தம் சிரசு திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் கோயிலில் இன்று பால்கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா. ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம்தேதி இந்த விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள் பங்கேற்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி அம்மன் சிரசு திருவிழா கோயில் வளாகத்திற்குள் எளிமையாக நடைபெற்று வந்தது. கெங்கையம்மன் சிரசு கோயில் வளாகத்தில் மட்டும் பவனி வந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் சிரசு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தாண்டு வைகாசி 1ம் தேதி (மே 15) கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக மே 11ம்தேதி அம்மன் திருக்கல்யாணமும், 14ம்தேதி தேரோட்டமும் நடைபெறும். இதையொட்டி பால்கம்பம் நடும் விழா கோயில் வளாகத்தில் இன்று காலை நடந்தது.  அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து பால் கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் பால்கம்பம் நடப்பட்டது.

இதையடுத்து பால் கம்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், கிராம நாட்டாமை சம்பத், கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, நகராட்சி கவுன்சிலர் மோகன் உள்பட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: