108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப்கார் சோதனை: 14ம் தேதி நடக்கிறது

வேலூர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வரும் 14ம் தேதி சித்திரை முதல் நாளில் ரோப் கார் சோதனை ஓட்டம் நடக்கிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலுக்கு செல்ல செங்குத்தான 1,305 படிக்கட்டுகளை கொண்ட மலை மீது ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். முதியவர்களும், நோயாளிகளும், ஊனமுற்றவர்களும் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த குறையை போக்க பழனி மலையை போன்று இங்கும் ரோப்கார் அமைக்க பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 2016ல் ரோப்கார் அமைக்க ரூ.8.26 கோடியில் மறுமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. இப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதன் சோதனை ஓட்டம் வரும் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை மாதம் முதல் நாளில் நடக்கிறது. இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரோப்கார் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14ம் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதன்பின்னர் தமிழக முதல்வரின் ஒப்புதலுடன் விரைவில் ரோப் கார் முறைப்படி இயங்கத்தொடங்கும்’’ என்றனர்.

Related Stories: