கவர்னர், முதல்வருடன் ஆலோசனை புதுவைக்கான உதவிகளை பிரான்ஸ் அரசு செய்யும்: தூதர் இமானுவேல் லெனைன் பேட்டி

புதுச்சேரி:  புதுச்சேரியில் நடைபெறும் பிரஞெ்சு கலாசார விழாவையொட்டி புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன் நேற்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, பிரான்ஸ் மற்றும் புதுவைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும், புதுவையில் நகர்ப்புற திட்டமிடல், பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா மேம்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், புதுவைக்கான பிரெஞ்சு துணை தூதர் லிசே டல்போட் பரே, மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளையின் அதிகாரி வெங்கடாசலம் முருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 பின்னர், பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக உள்ளது. பிரெஞ்சு காலத்திலிருந்து நீண்டகால வரலாற்று, கலாசார தொடர்புகள் புதுவையுடன் தொடர்ந்துள்ளது. புதுவைக்கு உதவும் வகையில் பல பணிகளை மேற்கொள்ள வந்துள்ளேன். இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்துள்ளேன். பிரான்ஸ் - புதுச்சேரி அரசும் இணைந்து புதுவை மேம்பாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளது. சுற்றுலா, கலாசார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், முதலீடுகளை பெறவும் முதல்வர் ரங்கசாமி ஆர்வமாக உள்ளார்.

அதற்கான உதவிகளை பிரான்ஸ் அரசு செய்யும். பிரெஞ்சு வளர்ச்சி முகமை (ஏஎப்டி) மூலமும் நிதி உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பிரெஞ்சு மக்களும் வசித்து வருகின்றனர். தற்போது பிரெஞ்சு ரான்தேவூ திருவிழாவும் சிறப்பாக இங்கு நடந்து வருகிறது. புதுவையை நான் மிகவும் விரும்புகிறேன். இங்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. புதுவை வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 தொடர்ந்து, கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை பிரான்ஸ் தூதர் இமானுவேல் ெலனைன் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும், பிரான்ஸ் மற்றும் புதுச்சேரி இடையிலான ஏற்றுமதியை அதிகரிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஊரக வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு, பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Related Stories: