கீழக்கரை ஜிஹெச்சில் முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை: பொதுமக்கள் பாராட்டு

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பூங்கொடி (55). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடிப்படி ஏறிய போது தவறி கீழே விழுந்தார். இதில் இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சில நாட்களுக்கு முன் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிருல்லா ஹூசைன் பரிசோதனை மேற்கொண்டதில் பூங்கொடிக்கு மூட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சக டாக்டர்களிடம் ஆலோசனை செய்து, கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி முட நீக்கிய நிபுணர்கள் டாக்டர் பிரபாகரன், ஆதித்யா, மனோஜ் குமார், மயக்கவியல் மருத்துவர் ராஜேஸ்வரன், செவிலியர்கள் ஆனந்தி, ஜெயராணி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பூங்கொடிக்கு சுமார் 4 மணிநேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக செய்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பூங்கொடி கூறியதாவது, ‘தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டார்கள். இன்னும் சில தினங்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார். கீழக்கரை அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: