ரூ.59.64 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்: நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால் மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.59.64 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார். நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால்  காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோயில் நகரம், பட்டு நகரம், சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகரத்தை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பது பொன்னேரிக்கரை சாலையாகும். காஞ்சிபுரம் ரயில் நிலையம் அமைந்துள்ள இந்த சாலையின் குறுக்கே இருப்புப்பாதை செல்லும் நிலையில் சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து காரணமாக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதன்காரணமாக பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் நீண்ட நேரம் காத்திருந்து செல்லவேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. விபத்து நடக்கும் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து செல்லவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் சிரமப்பட்டு வந்த காஞ்சிபுரம் நகர மக்கள், ரயில் பாதையை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என நீண்ட நாட்களாக தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். காஞ்சிபுரம் நகர மக்களின் கோரிக்கை ஏற்று கடந்த 2017ம் ஆண்டு ரூ.59.64 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் 66 தூண்களுடன் 70 தளங்கள் கொண்டு 800 மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதையின் குறுக்கே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி  மூலம் காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார். மகிழ்ச்சியில் பொதுமக்கள் ரயில்வே மேம்பாலத்துக்கு மலர்தூவினர்.  நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு காஞ்சிபுரம் நகர மக்கள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, துணைமேயர் குமர குருநாதன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் மற்றும் ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: