ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமான ஏரிகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஏரிகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும், என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் 125 ஏரிகள் மூலமாக விவசாய நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கான  நீர் பாசன தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏரிநீர் பாசன தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 139 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது:ராணிப்பேட்டை மாவட்டத்தில் 125 ஏரிகள் உள்ளன. இதன் மூலமாக விவசாயிகள் தங்களது உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆட்சி காலம் போன்று முறைகேடுகள் இல்லாமல் ஏரிகளை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏரிகளை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி ஏரிகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும், என்றார்.அதனைத்தொடர்ந்து, பணியின்போது இறந்த இரண்டு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். மேலும், ஆற்காட்டை சேர்ந்த 11 இருளர் சமுதாயத்தினருக்கும், 5 திருநங்கைகளுக்கும் மின்னணு குடும்ப அட்டை, 2 பேருக்கு தலா ₹5.400 மதிப்புள்ள இஸ்திரி பெட்டி, 4 பேருக்கு விபத்து நிவாரண நிதியாக ₹3.5 லட்சம் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகளை வழங்கினார். இதில், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: