டீசல், சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தியதால் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: விவசாயிகள், பொதுமக்கள் கவலை

சென்னை: டீசல், சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியதால், சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை திடீரென நேற்று உயர்ந்தது. இதனால் பொதுமக்களும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளும் கவலையடைந்தனர். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று, லாரி, வேன் என 600 வாகனங்களில், சுமார் 5000 டன் தக்காளி, வெங்காயம், உருளை, பீன்ஸ், முருங்கை போன்ற காய்கறிகள் வந்தன. காய்கறி வரத்து அதிகளவில் இருந்தும், அவற்றின் விலை குறையவில்லை. அதற்கு மாறாக, நேற்று விலை அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம், ரூ.7க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நாட்டு தக்காளி நேற்று ரூ.15க்கும், ரூ.6க்கு விற்கப்பட்ட  ஒரு கிலோ நவீன தக்காளி ரூ.14க்கும், ரூ.14க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் ரூ.18க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70க்கும், ரூ.20க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் ரூ.70க்கும், ரூ. 12க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.35க்கும், ரூ.5க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ  கத்திரிக்காய் ரூ.25க்கும், ரூ.7க்கு விற்கப்பட்ட ஒரு சவ்சவ் ரூ.15க்கும், ரூ.8க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.12க்கும், ரூ.15க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில், கடந்த சில தினங்களுக்கு முன் காய்கறிகள் விலை சரிந்தன. இதனால், வியாபாரிகள் மிகவும் வேதனை அடைந்தனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பு காரணமாக, காய்கறி விலைகள் உயர்ந்துள்ளது.’’ என கூறினார். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, எங்களின் உற்பத்தி பொருள் விலை உயரவில்லை. அப்படியே நாங்கள் உயர்த்தினாலும் அதை டீசல் மற்றும் சுங்கக்கட்டணத்துக்கே தருகிறோம். இதனால், எங்களுக்கு நஷ்டம்தான். பொதுமக்களுக்கும் இதனால் கஷ்டம்தான். எங்கள் லாபம், ஒன்றிய அரசுக்கு டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டண உயர்வாக சென்றுவிடுவதால், எங்களுக்கு எந்த பலனும் இல்லை’’ என்றனர்.

Related Stories: