முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் முடியும்!: வன்னியர் உள்ஒதுக்கீட்டை நிச்சயம் பெற்று தருவார்.. மருத்துவர் ராமதாஸ் நம்பிக்கை..!!

சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் பெற்றுத் தருவார் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்தும், அதன்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்து முடிவு எடுப்பதற்காக சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் பா.ம.க.வின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கை திமுக அரசு சிறப்பாக கையாண்டது. சிறப்பான ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத்திலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர் என்று பாமக கூட்டத்தில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர், கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னியர் இடஒதுக்கீட்டை பெற்றுத்தருவார் என்று ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் எதிர்பார்க்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் ஒரே வாரத்தில் வன்னியர் வழக்குக்கு தேவையான புள்ளி விவரத்தை சேகரிக்க முடியும். வன்னியர் உள்ஒதுக்கீடு பெறுவதற்காக போராட்டம் தேவை இருக்காது. வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்காக போராட்டங்கள் எதுவும் அறிவிக்கப்போவதில்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Related Stories: