திருச்சி அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ஊர்க்காவல் படை வீரர் உள்பட 6 பேர் தப்பினர்

முசிறி: திருச்சி அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. ஊர்க்காவல் படை வீரர் உள்பட 6 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் ராகேஷ் (36). இவர், தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு திண்டுக்கல்லுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை ராகேஷ் ஓட்டி வந்தார். அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் புகை கிளம்பியது.

இதனை கவனித்த ராகேஷ், உடனே காரை நிறுத்தி பார்ப்பதற்குள் காரில் தீ மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து ராகேஷ், காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேரையும் காரில் இருந்து வெளியேற்றினார். இதில் அனைவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலை அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: