மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் மூழ்கிய விசைப்படகு மீட்பு

பேராவூரணி : மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் மூழ்கிய விசைப்படகை மீனவர்கள் மீட்டனர்.தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. வாரத்தில் மூன்று நாட்களான திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டத்தை சேர்ந்த ஷாபிக்அகமது என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த சனிக்கிழமை (26ம் தேதி) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) அதிகாலையில் திரும்பியது.

விசைப்படகை மல்லிப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்திலே கட்டி விட்டு மீனவர்கள் வீட்டுக்கு சென்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மல்லிப்பட்டினம் துறைமுகம் சென்ற ஷாபிக்அகமது துறைமுகத்தில் கட்டியிருந்த விசைப்படகு கடலில் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பொக்லேன் இயந்திர உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய விசைப்படகையும், மீன்பிடி வலைகளையும் மீட்டனர். விசைப்படகு முறையாக கட்டப்படாததால் காற்றினால் மூழ்கியதா, படகின் அடிப்பாகத்தில் துவாரம் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து மூழ்கியதா என்ற விபரம் தெரியவில்லை. நிறுத்தப்பட்ட விசைப்படகு கடலில் மூழ்கியதால் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: