எஸ்.ஆர்.புரத்தில் 19 செம்மரக் கட்டைகள் கடத்த முயற்சி-அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் கைது

திருமலை :  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர். புரம் அருகே 19 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்து மூன்று கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து அதிரடிப்படை எஸ்.பி.  சுந்தர ராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஆர்.ஐ. சுரேஷ்குமார், ஆர்.எஸ்.ஐ. வினோத்குமார் தலைமையில் சித்தூர் கிழக்கு பிரிவு எஸ்.ஆர்.புரம் மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ரோந்து சென்றனர். அப்போது திங்கள்கிழமை காலை, எஸ்.ஆர்.புரம் மண்டலம் புத்தூர் மெயின் ரோடு அருகே உள்ள மண் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர்.  அவர்கள் அதிரடிப்படையினரைப் பார்த்து தப்பியோட முயன்றனர்.

அவர்களை பிடித்து சோதனை செய்த போது மூன்று செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், எஸ்.ஆர்.புரம் மண்டலத்தைச் சேர்ந்த ரஞ்சித் (25), சங்கர் (32), மங்க சமுத்திரத்தைச் சேர்ந்த ரவி (37) என்பது தெரியவந்தது.  ரஞ்சித் அரசு பேருந்து ஓட்டுனர் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தலுக்காக ஆயக்கட்டு குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 செம்மரங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.  மொத்தம் 590 கிலோ எடை கொண்ட 19 செம்மரங்களின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இதுதொடர்பாக, டிஎஸ்பி முரளிதர், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி   வருகின்றனர்.

Related Stories: