கேரளாவில் இருந்து வில்லியனூருக்கு கன்டெய்னரில் கடத்தல் புதுவை அமைச்சரின் மகள் ஆலையில் ரூ.5 கோடி சந்தன கட்டைகள் பறிமுதல்: வனத்துறை அதிரடி சோதனை; ஊழியர்களிடம் விசாரணை

சேலம்: கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தப்பட்டு, புதுச்சேரி அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் பதுக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து சேலம் வழியே கன்டெய்னர் வேனில் சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக கடந்த இரு வாரத்திற்கு முன்பு சேலம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான தனிப்படையினர் மகுடஞ்சாவடி நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது கேரளா பதிவெண் கொண்ட கன்டெய்னர் வேனை நிறுத்தி சோதனையிட்டதில், உள்ளே 86 மூட்டைகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள 1.5 டன் சந்தன கட்டைகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்து, கடத்தி வந்த சரக்கு வாகன டிரைவரான கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி நருக்கரா பகுதியை சேர்ந்த முகமது சுகைல் (34), உதவியாளரான மலப்புரம் புக்கட்டூரை சேர்ந்த முகமது பசிலு ரகுமான் (26) ஆகியோரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் இக்கடத்தலில் தொடர்புடைய கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகமது மிசைல் (27), முகமது அப்ரார் (26), பஜாஸ் (35), உம்மர் (43) ஆகிய 4 பேரை ஈரோடு பெருந்துறை தனியார் ஓட்டலில் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரில், முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், முகமது பசிலு ரகுமான் ஆகிய 4 பேரை விசாரணைக்காக கடந்த 10ம் தேதியன்று 3 நாள் காவலில் எடுத்தனர். பின்னர், அவர்களை சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து தனிப்படை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் சந்தன ஆயில் ஆலைக்கு சந்தன கட்டைகளை கடத்திச் செல்வது தெரியவந்தது. சேலத்திற்கு அடுத்து ஓரிடத்தில் வண்டியை நிறுத்திச் சென்றதும், மற்றொரு கும்பல் வந்து அந்த வண்டியை எடுத்துச் செல்வார்கள் எனவும், ஏற்கனவே பலமுறை இதேபோல் சந்தன கட்டைகளை கடத்திச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சேலம் மாவட்ட உதவி வனபாதுகாவலர் செல்வகுமார் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரிக்கு விரைந்தனர்.அங்கு வில்லியனூர் அருகேயுள்ள உளவாய்க்கால் கிராமத்திலுள்ள சம்பந்தப்பட்ட சந்தன ஆயில் ஆலைக்குள் அதிரடியாக வனத்துறை அதிகாரிகள் புகுந்தனர். சேலம் தனிப்படையுடன், விழுப்புரம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என 15 பேர் சென்றனர். மெத்தமாக 25 பேர் கொண்ட குழுவினர் அந்த ஆலையில் தீவிர சோதனை நடத்தினர். வனத்துறையினர் சென்றபோது, சில ஊழியர்கள் மட்டுமே அந்த ஆலையிலும், அங்கிருந்த குடோனிலும் இருந்தனர். மற்றபடி முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனால், ஆலை உரிமையாளர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

அதில், புதுச்சேரி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான இடம் என்றும், அங்கு கேரளாவை சேர்ந்த நாசர் என்பவர் சந்தன ஆயில் ஆலையை நடத்தி வருவதும் தெரியவந்தது. அந்த ஆலையில் சந்தன ஆயில் தயாரித்து, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். இதையடுத்து விடிய விடிய ஆலை முழுவதும் வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில், 6 டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சுமார் அரை டன் அளவிற்கு சந்தன கட்டைகளை அரைத்த பவுடர் இருந்தது. அவை அனைத்தையும் வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சந்தன மரக்கட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட எண்ணிக்கையில் இருந்து 40 கிலோ அதிகமாக இருப்பது தெரியவந்தது. மேலும் இறக்குமதி செய்து இந்த கட்டைகள் அனைத்தும் தமிழக பகுதிகள் வழியாக தான் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி சான்றிதழ் மற்றும் கணக்கில் வராத சந்தன கட்டைகளுக்கான பில் போன்றவற்றை நாசரிடம் வனத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர் காலையில் கொடுப்பதாக கூறியதின்பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். தொடர்ந்து நேற்று 2வது நாளாக ஆலைக்குள் சோதனையிட்டு விசாரித்தனர்.

இதில் 32 கிலோ சந்தனமரத்தின் வேர்கட்டைகள் இருப்பதும், பாய்லர்களில் சந்தன ஆயில் இருப்பதும் தெரியவந்தது. அங்கிருந்த ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த ஆலையை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், கேரளாவை சேர்ந்த நாசர் என்பவருடன் சேர்ந்து நடத்தி வருவதாகவும், அவருக்கு கேரளாவில் இருந்து சிலர் சட்டவிரோதமாக சந்தன கட்டைகளை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் ஆலையின் உரிமையாளர், அதனை நடத்தி வந்தவர்கள் என 5க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்களை தொடர்பு கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே சந்தன மரக்கட்டைகளுக்கான பில்களை காலையில் கொடுப்பதாக கூறிய நாசர் எந்தவித ஆவணத்தையும் கொடுக்கவில்லை. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ய புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தமிழக வனத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டனர். இதனை விசாரித்த நீதிபதி அரசுக்கு சொந்தமான பொருள் யாரிடம் இருந்தாலும் குற்றம்தான். வனத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் பறிமுதல் செய்துகொள்ளலாம் என தெரிவித்தனர். இதையடுத்து தமிழக வனத்துறையினர் 7 டன் சந்தன மரக்கட்டைகள், ஆயில், துகள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சேலம் கொண்டு சென்றனர். புதுச்சேரி அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் 6 டன் சந்தன கட்டை, அரை டன் சந்தன பவுடர் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கேரளா வனத்துறை அதிகாரிகளும் விசாரணை
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 டன் சந்தன கட்டைகள் சேலத்தில் சிக்கியதும், கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால் அங்கிருந்து 5 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் குழுவினர் சேலம் வந்து விசாரித்தனர். அவர்கள், சேலம் வனத்துறையால் காவலில் எடுக்கப்பட்ட முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், முகமது பசிலு ரகுமான் ஆகிய 4 பேரிடமும் விசாரித்தனர். அதில், மலப்புரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து சந்தன கட்டைகளை வெட்டி பதுக்கி வைத்து, அதனை ரகசியமாக கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் மலப்புரத்தில் சந்தன கட்டைகள் வெட்டப்பட்ட இடத்தில் அம்மாநில வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கும் இக்கடத்தல் வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள் எனக்கூறப்படுகிறது. இதனிடையே காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட 4 பேரையும் சேலம் ஜே.எம்.6 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

* சாக்கு மூட்டைகளில் சந்தனக்கட்டைகள்
சேலத்தில் கேரளா கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1.5 டன் சந்தன கட்டைகளும் 86 சாக்கு மூட்டைகளில் இருந்தது. அதுபோலவே புதுச்சேரி தனியார் சந்தன ஆயில் ஆலையில் சிக்கிய 6 டன் சந்தன கட்டைகளும் நூற்றுக்கணக்கான சாக்கு மூட்டைகளில் இருந்தது. இதனால், இந்த சந்தன கட்டைகளை ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் கேரளாவில் இருந்து கடத்தி வந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர். அந்த கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், இதே ஆலையில் வெளிநாடுகளில் இருந்து சந்தன கட்டைகளை கொள்முதல் செய்து ஆயில் தயாரிப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

The post கேரளாவில் இருந்து வில்லியனூருக்கு கன்டெய்னரில் கடத்தல் புதுவை அமைச்சரின் மகள் ஆலையில் ரூ.5 கோடி சந்தன கட்டைகள் பறிமுதல்: வனத்துறை அதிரடி சோதனை; ஊழியர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: