போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா ஜாமீனில் விடுவிப்பு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமாவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் மது விருந்து நடந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி இந்த விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த போதை விருந்தில் 73 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 103 பேர் கலந்துகொண்டதும், இதில் 59 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் என மொத்தம் 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இவை அவர்களுடைய ரத்த மாதிரிகள் சோதனையில் தெரியவந்தது. இவ்வழக்கில் நடிகை ஹேமா உட்பட 8 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், நடிகை ஹேமா உடல் நலக்குறைவால், தன்னால் ஒரு வாரம் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறி கால அவகாசம் கேட்டிருந்தார்.

இதையடுத்து, மீண்டும் அவருக்கு 2வது முறையாக போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் ஹேமா உள்பட 8 பேரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால் அவரை கடந்த 3ம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நடிகை ஹேமா தரப்பில் முறையிடப்பட்டது. இம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

The post போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா ஜாமீனில் விடுவிப்பு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: