8 பேர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: மே.வங்க முதல்வர் மம்தா உறுதி

கொல்கத்தா: ‘மேற்கு வங்க மாநிலத்தில் 8 பேர் உயிரிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பகதூ ஷேக் திங்களன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது கிராமத்தில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகளுக்கு சிலர் தீ வைத்தனர். இதில் இரண்டு சிறுவர்கள், பெண்கள் உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி ஒன்றிய உள்துறை அமைச்சகமும் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் சிறுவர்கள், பெண்கள் கொடூரமாக எரித்து கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநில காவல்துறை தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தேசிய மகளிர் ஆணையம், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 24 மணி நேரத்தில் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘பிர்பூம் மாவட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் எந்த கட்சியை  சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்தவித பாகுபாடுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். நேற்று சம்பவம் நடந்த கிராமத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். ஆனால் வேறு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்றதை அடுத்து மம்தாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. சம்பவம் நடந்த கிராமத்திற்கு இன்று செல்லும் முதல்வர் மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

Related Stories: