33வது ஆண்டு நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி: செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை: ராஜிவ்காந்தியின் 33வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரசார் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 33வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், விஷ்ணு பிரசாத் எம்பி, பிரின்ஸ் எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வி.பி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், ஊடக துறை தலைவர் கோபண்ணா, மகளிர் அணி தலைவர் ஹசீனா சையத், மாவட்ட தலைவர்கள் எம்.ஏ‌.முத்தழகன், டெல்லி பாபு, ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர், ஓபிசி பிரிவு துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ், எஸ்சி பிரிவு மாநில துணை தலைவர் செ.நிலவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து சின்னமலையில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏழை, எளியோருக்கு அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்போது, செல்வபெருந்தகை அளித்த பேட்டியில், ”இந்த நாட்டில் விஞ்ஞான யுக புரட்சியை செய்த மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தியை நினைவு கூறுகிறோம். பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலமாக எல்லோருக்கும் சம வாய்ப்பு, எல்லோருக்கும் அரசியல் உரிமை என்ற முறையில் பஞ்சாயத்து சட்டத்தை கொண்டு வந்த தலைவர் ராஜிவ்காந்தி. கடை கோடியில் இருக்கிற குப்பனும், சுப்பனும் பச்சை மையில் கையெழுத்து போடுகிறார்கள் என்றால் அந்த அரசியல் உரிமையை மீட்டுக் கொடுத்தவர் ராஜீவ் காந்தி தான்” என்றார்.தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் செல்வபெருந்தகை தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.

The post 33வது ஆண்டு நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி: செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: