ஈழத்தமிழர்க்கு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கை தீவில் அமைதியான வாழ்க்கை என்பது இல்லை : முரசொலி

சென்னை : ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைய அறிக்கையின் அடிப்படையில், இலங்கை இறுதி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.

முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை பின்வருமாறு..

அறிக்கையும் அரசியல் தீர்வும்!

ஈழத் தமிழரது எதிர்காலம் இன்னமும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அரசியல் தீர்வு எட்டப்பட்டு, உரிமைகள் பெற்ற அமைதி வழி வாழ்க்கை அமைவதற்கான அடித்தளம் இன்னமும் எட்டப்படவில்லை.

ஈழத்தமிழர் உரிமைக்கான இறுதிப் போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. போர்க்குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களும் இணைந்து தமிழ் மக்களை அழித்தொழிக்கக் காரணமாக அமைந்தது அந்தப் போர்.

இது தொடர்பாக கடந்த மே 17ம் நாளன்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

2009ம் ஆண்டு காலக்கட்டத்து கொடூர நிகழ்வுகளை இந்த அறிக்கை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது. “இலங்கை உள்நாட்டுப் போரின்போது வலுக்கட்டாயமாக மாயமாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் கதி மற்றும் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து வெளியிட இலங்கை அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈழத்­த­மி­ழருக்கு நிரந்­த­ர­மான அரசியல் தீர்வு வழங்­கும் வரை இலங்கையில் அமை­தி இல்லை – முரசொலி!

அந்த மக்கள் மாயமாக்கப்பட்டதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளுக்குப் பங்கிருப்பதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டு அதற்கு பொது மன்னிப்புக் கோர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையைக் கண்டு இலங்கை அரசு அதிருப்தி அடைந்ததாகவும், ஐ.நா. அமைப்புக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதில் அதிருப்தி தெரிவிக்க என்ன இருக்கிறது? குற்றம் சாட்டப்பட்டதரப்புக்கு விளக்கம் அளிக்கும் கட்டாயம் இருக்கிறதே தவிர, இது போன்ற அதிருப்தி தெரிவிக்கும் உரிமை இல்லை.

1 லட்சத்து 46 ஆயிரத்து, 679 பேர் என்ன ஆனார்கள் என்பதே இதுவரை தெரியவில்லை என்கிறது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை என்ற அமைப்பு.

இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடினார்கள். அதனால் பயனில்லை என்று அறிந்த பின்னர் தான் ஆயுத வழியில் போராடினார்கள்.

அந்தப் போராட்டம் மிகக் கொடூரமான வகையில் அடக்கி அழிக்கப்பட்டது. உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களான வெள்ளைப் பாஸ்பரஸ், கிளஸ்டர் குண்டுகள், கொத்துக் குண்டுகள் தமிழர்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்டன, மயக்கக் குண்டுகள் வீசப்பட்டன. போரே நடந்தாலும், போரியல் நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பன்னாட்டு விதி.

ஆனால், எந்தப் போரியல் நெறிமுறையும் இல்லாமல் நடந்த போரை அன்றைய தினம் ‘ராஜபக்க்ஷே’க்கள் நடத்தினார்கள். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் வழியாகவும், எவை எல்லாம் போர்க் காலத்தில் செய்யக் கூடாதோ அவை அனைத்தையும் பயன்படுத்தி 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் போராட்டம் அழித்தொழிக்கப்பட்டது.

2012 ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு முன்னெடுத்த டெசோ மாநாடு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

‘இலங்கைத் தமிழர்கள், அவர்களது அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கே வழங்கும் தீர்மானத்தை ஐ.நா.சபையிலும், மனித உரிமை ஆணையத்திலும் கொண்டு வர வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் நகல், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கப்பட்டது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும் அமெரிக்கா சென்று ஐ.நா. பொதுச்செயலாளர் யான் லியாசன், ஜெனீவா ஐ.நா.மனித உரிமை ஆணையம் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகியோரிடம் வழங்கினார்கள்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனை தோற்கடிக்க இலங்கை பெரிய முயற்சிகள் எடுத்து, தோல்வி அடைந்தது.

22 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நின்றன. இந்தியா உள்ளிட்ட14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது தீர்மானமாகவே இருக்கிறது.

இலங்கை அரசின் போர்க்குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பது, போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களைத் தண்டிப்பது, உயிரிழந்த மக்களின் குடும்பத்துக்கான நீதியை வழங்குவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிதியும் கிடைக்க வழி வகை செய்வது, காணாமல் போனவர்களைக் கண்டறிதல், அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றை இலங்கை அரசு உடனடியாகச் செய்தாக வேண்டும்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும். பொருளாதார மேம்பாடு செய்து தரப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கான அரசியல் பகிர்வு வழங்கப்பட்டு மாகாண சபைத் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டும்.

‘தீவிரவாதிகளுக்கு எதிரான போர்’ என்று சொல்லி மக்களுக்கு எதிரான போரை இலங்கை நடத்தியது. அந்த போர் முற்றுப்பெற்ற பிறகும் கடந்த 15 ஆண்டு காலத்தில் இலங்கையில் எந்த நிலைமை மாற்றமும் இல்லை.

தவறான நிர்வாகத்தால் பொருளாதார நெருக்கடியில் மொத்தமாகச் சிக்கியது அந்த நாடு. ஈழத்தமிழர்க்கு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கை தீவில் அமைதியான வாழ்க்கை என்பது இல்லை.

The post ஈழத்தமிழர்க்கு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கை தீவில் அமைதியான வாழ்க்கை என்பது இல்லை : முரசொலி appeared first on Dinakaran.

Related Stories: